Thursday, 29 December 2011

இருக்கும் பணத்தை செலவு செய்ய ஸோர்ஸ் தேடும் பெருமக்கள் அடிக்கடி உலவும், ஸ்பென்ஸர் ப்ளாஸாவின் படிக்கட்டுகளில் அமர்ந்து, இப்படி ஒருவன் அமர்ந்து இருப்பதையே அறியாமலும், அறிந்தாலும் சட்டை செய்யாமலும் நகரும் பி.பி. டாப்ளட் அங்கிள்கள், ஸ்லீல்லெஸ் ஆன்ட்டிகள், ஸ்ட்ரெய்டன்ட் ஹேர் ரோமியோக்கள், வாக்ஸன்டு ஸ்கின் கேர்ள்ஸ், க்ளீவேஜ் கண்ணிகள் ( க்ளீவேஜ்- என்றால் என்ன? என்று கேட்பவர்கள் பெயர் கூடிய சீக்கிரம் ஒயிட் ஹவுஸ் புக்கில் இடம்பெறட்டும். ஒயிட் ஹவுஸ் புக் என்றால் ஏதோ உயர்வானது என்று நினைப்பவர்கள் கூகுளில் தேடவும்) ஆகிய யாவரையுமே பொருட்படுத்தாது, இந்தக் குழந்தை இப்படி வெறி கொண்டு எழுதுவது யாதெனில் " எனக்கு ஏன் இந்த நிலமை" என்பதே ஆகும். 

இரண்டாள் உயரமும், முறுக்கி விட்ட கிடாய் மீசையுமாய், நட்டமாய் நின்று "பார்த்தசாரதி" அருள்பாலிக்கக் காத்துக் கிடந்தாலும், அவரை விட முக்கியம் டாஸ்மாக் தான் என்று ஒரே ரோட்டில் 5 டாஸ்மாக்குகள் வைத்து, ட்ராபிக் ஜாம் செய்யும் அளவிற்குக் குடிமகன்கள் பெருத்தது ட்ரிப்ளிகேனி (எ) திருஅல்லிக்கேணி (எ) திருவில்லிக்கேணி. புறாக்கூண்டு மேன்சன்களுக்கு மத்தியில், புல்வெளி, தோட்டம், விளையாட்டு மைதானம், விசாலமான காற்றோட்டம் கொண்ட அறைகள் என்ற ஒரு ட்ரீம் மேன்சன் எமது. 

முதல்நாள் இரவு, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற கூற்றை நம்பி வந்துவிட்டு எம் போன்ற "பேச்சுலர்களால்" அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற ஆந்திரா மெஸ்களில் ஒன்றைத் தேடிப் பிடித்து 2 ஆப்பாயில், ஒரு ஆம்லெட் சகிதம் ஆறு ரவுண்டு மீல்ஸும், கடைசியில், கர்ட் வித் ஸுகரும் (curd with sugar) சாப்பிட்டு விட்டு வந்து படுத்தேன். எமைத் தேடி எப்போதும் போல் ஓடோடி வந்தாள் நித்திரைக் கண்ணி. சரி வந்துவிட்டாளே, என்று அவளிடம் எமை ஆட்கொள்ள விட்டேன். பிரபல நடிகையுடன் டூயட் பாடுவதாய்க் கனவு. பிற்காலத்தில் பிரபல எழுத்தாளர் ஆகும் வாய்ப்பு எமக்குப் பிரகாசமாக் இருப்பதாலும், அப்போது இந்த நடிகை (எப்படியும் மார்கெட் போயிருக்கும்) "என் கனவிலே தான் வந்த"தைச் சொல்லி அழுகுனி மெகா சீரியல்களில் வாய்ப்புத் தேட முற்படலாம் என்பதால், பொதுநலம் கிஞ்சிற்றும் இன்றி சுத்தமான சுயநலத்தின் பெயரால் அந்த நடிகையின் பெயரை இங்கே தவிர்க்கிறேன். கனவைக் கலைத்தது இயற்கை உபாதைகளில் ஐந்தில், நான்கைக் கழித்தால் வருவது. லைட்டைப் போட்டு, ரூம் மேட்டுகளிடம் சகஸ்ரநாமம் பெற விரும்பாமல், ஒருவழியாகச் சென்று, கூட்டலுக்கு எதிர்ப்பதமானதைச் செய்துவிட்டு வந்தேன். மணி சுமாரய் 4.30/5.00 இருக்கும். ரூம் வாசலில் ஒரு ஆறு பேர். நார்த் இந்திய நன்னாரிகள்.


ராம் ராம் ராஜா பைய்யா என்றார்கள். 

ராம் ராம் என்றேன். 

ராஜா பைய்யா ஹாப்பி தீவாளி என்றார்கள். 

ஹாப்பி தீவாளி என்றேன். விட்டதா விதி? 

"பைய்யா ஹம் தீவாளி க்யோன் மனாதேன்" என்றார்கள். (அதாவது, அண்ணே, நம்ம தீவாளி ஏன் கொண்டாடுறோம் ) 
கொலகாரப் பாவிகளா? எந்த நேரத்துல என்ன கேள்விடா கேக்குறீங்க. வந்த கடுப்பில் 
"துபாரா மத் பூச்னா" ( க்ளோரோமின்ட் விளம்பரம் பார்க்கவும்) சொல்ல மற்றும் செய்ய நினைத்தேன். ஆனால், அந்த நேரத்திலும் விழிப்பாய்ச் செயல்பட்ட எமது மூளையின் நியூரான்கள் " தம்பி ராஜா அவர்கள் ஆறு பேர், நீ தனி ஆள், அதுவும் உனது அர்னால்ட் உடம்புக்கு இது மிகவும் கெடுதல்" என்ற தகவலை செரிப்ரம், செரிபெல்லம் வரைகும் அப்டேட் செய்ய, அமைதியாய்ச் சொன்னேன் " கவர்மெண்ட் ஸ்டாஃப் போனஸ் கேளியே, பிரைவேட் ஸ்டாஃப் சுட்டி கேளியே அவுர் நேதவோ வோட் பேங்க் கேளியே". 
(அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கிறது, தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது, அரசியல் தலைவர்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது ) 

அசராமல் கேட்டான் ஒரு மராட்டிய மங்குனி பாண்டியன் ( ராஜ் தாக்கரே இதைக் கண்டு கொள்ளா(ல்லா)திருப்பாராக. " தோ ஆம் ஆத்மி". (அப்ப சராசரி மனிதன்? அதாவது காமன் மேன் ) 

இறைவனின் படைக்கும் சக்திக்கு உடனே ஒரு சென்சார் போர்டு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், இவனைப் போல் இன்னும் பல பேர் பிறந்து, எமைப் பாடாய் படுத்தும் அபாயமிருக்கிறது. 

பதில் சொன்னேன் " ஆம் ஆத்மி, உஸ்கோ கோயி அவுர் காம் நஹி, கோயி அவுர் தறிக்கா நஹி". 
( சராசரி மனிதனுக்கு வேற வேல இல்ல, வேற வழியுமில்ல) 

சிரித்தார்கள். பரதேசிகளா, சிரிக்கிறது கூட போஜ்புரியிலயாடா? 

சரி இந்தக் கேப்பில் நைஸாய்க் கழன்டு கொள்ளலாம் என்று நினைத்தை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டது ஒரு பீஹாரி பைன்ஸ். கேட்டது "ஹம் சப் ஹாப்பி தீவாளி க்யோ கஹ்தே, தீவாளி கி சுப் காம்னாயே க்யோ நஹி கஹ்தே". ( தீவாளி வாழ்த்துக்கள் ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறோம்) 

அது பொதுவாய்த் தான் கேட்டது. ஆனாலும், என்னைத் தவிர மற்ற எல்லோரும் என்னையே பார்த்தார்கள் அதாவது, இந்தக் கேள்விக்கும் நானே பதில் சொல்ல வேண்டுமாம். அடப் பாவிகளா? நான் என்ன " இவ்விடம் தங்களது சந்தேகங்கள், உடனுக்குடன், இலவசமாகத் தீர்த்து வைக்கப்படும்" என்று என் கழுத்தில் போர்டு மாட்டிக் கொண்டா திரிகிறேன். வேறு வழியின்றிச் சொன்னேன் " யார் ஸிர்ப் விஷ் கர்னா ஹ யார். இஸ்மே பாஷா கி கோயி பர்வாஹ் நஹி". ( வாழ்த்துக்கள் சொல்வதற்கு மொழி தடையாகாது ) 

இன்னொருவன் கேட்டான். பாய் க்யோன் பாய் அங்ரேஜி பேன் க்யோன் கஹே. ஹிந்தி மேன்ஹி கஹனா ஹ பாய். ஐஸே கஹனா மேரா ரைட் ஹ பாய். என்றான். ( அவனுக்குப் பிடித்த மொழியில் சொல்வது அவனது உரிமையாம்) " ஸோ டஸ் மை சாய்ஸ் ஆப் லாங்குவேஜ்" என்றேன்.

பாய் பிரிட்டிஸர்ஸ் லெப்ட் இந்தியா, தென் ஒய் டு ஹாவ் தேர் இங்லீஷ், விச் தே கேவ் என்றான்.(bhai britishers left india India, then why to have their english, which they gave) ஹா, தென் கிவ் பேக் த ஃப்ரீடம் தட் தே கேவ் யூ. ஈவன் ஃப்ரீடம் வாஸ் கிவன் பை பிரிட்டிஷர்ஸ்" (huh, then give back the freedom which they gave. Even freedom was given by British) என்றேன். ஆடிப் போய்விட்டார்கள். இது போதும் நான் தப்பிக்க. "ராம் ராம் " சொன்னேன் சத்தமாக. புரிந்து கொண்டு கிளம்பினார்கள்.

ரூமில் நுழைந்து சட்டை அணிந்து காபி குடிக்கக் கிளம்பினேன். பில்டர் காபி. எனது பேவரிட். As usual ஆனந்த பவன். எல்லாமே As usual. காபி, நுனி நாக்கில் இனித்து, அடித் தொண்டையில் கசந்தது. நல்ல காபியின், அடையாளமே இதுதான். 


ரூமிற்கு வந்தேன். தூக்கம் கலைந்து விட்டிருந்தது. ஹீட்டர் வைத்தேன் வெந்நீர் வேண்டி. குளித்து முடித்து தலை துவட்டிய வண்ணம் செல்போன் பார்த்தேன். எனது பாஸின் மிஸ்டு கால். சனியன். ஒரு நாளு கெழம நிம்மதியா இருக்க விடாது. நான் செல்போனைத் திட்டினேன். பாஸை அழைத்தேன். ஹாப்பி தீவாளி ராஜா என்றார்.ஐயய்யோ மறுபடியுமா என்று மனதிற்குள் கதறினேன். விஷயம் என்னவென்றேன். ரொம்ப கூலாக சொன்னார். அலுவலகம் வரும்படி. நோ நோ, போகும்படி ( அவர் வரவில்லை). 

அலுவலகம் சென்றேன். செத்தேன். ஜாவா 1.4, ஆரக்கிள் 9-I இருக்கும் அப்ளிகேஷனை, ஜாவா 1.6, ஆரக்கிள் 10g -இல் வேலை செய்யவில்லை என்றார்கள். விளக்கினேன். சரி இப்ப வேல செய்ய வை என்றார்கள். பாவிகளா, காளை மாடு பால் சுரக்காது என்றேன். அவர்களோ என்ன வேண்டுமானலும் த்ருகிறோம் என்றார்கள். ஐயா, வல்லாளகண்டய்ங்களா, வேப்பம்புண்ணாக்கு இல்ல, கடலப்புண்ணாக்கு வச்சாலும் காள மாடு பால் கறக்காது என்று விரிவுரையாற்றி விட்டு, காலை 8.45க்கு நழைந்தவன், மதியம் 12.35க்கு வெளியேறினேன். இதோ வந்துவிட்டேன் spencer-க்கு. நேற்றிரவே இன்று மாலை 3 மணிக்கு சத்யமில் மேட்னி பார்ப்பதாய் நண்பர்கள் ஏற்பாடு. இன்னும் நிறைய நேரமிருக்கிறது.

Spencer - வெகு காலமாய், சென்னையின் நவநாகரீகத்தின் அடையாளம். என்னதான் சிட்டி சென்டர்கள், இஸபானி ப்ளாஸாக்கள் வந்தாலும், கார்ன்ஃப்ளேக்ஸையும், ப்ரட் டோஸ்டையும் அருகே நெருங்க விடாமல், எப்போதும் நம்பர் ஒன்னாக் இருக்கும் பிரேக்ஃபாஸ்ட் இட்லி போல், எப்போதும் இது நம்பர் 1 தான். என்ன காரணம்? யோசித்தேன். பாருங்கள் வெட்டியாய் இருந்தால் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியது இருக்கிறது. சரி வாருங்கள் காரணத்தைப் பார்ப்போம். 

சிட்டியின் மையத்தில், சுலபமாக அடையும் இடம். மவுண்ட் ரோடில் spencer ஒரு குறிப்பிடத்தகுந்த லான்ட்மார்க். அதிலும் ஜோடிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஜோடி போட்டு நடக்கையில், ஒரு கை 5 ரூபாய் கோன் ஐஸுடன் வலம் வந்து என் போன்றோர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். ஒரு கை கோனைஸைப் பிடிக்கிறது, அப்ப் இன்னொரு கை என்ன செய்யும் என்று யாரும் அபத்தமாகக் கேட்டு விடாதீர்கள். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முயன்றால், பிறகு தலைப்பில் 18+ என்று போட வேண்டி வரும். சத்யம் தியேட்டரில் டிக்கட் கிடைக்கவில்லையா, கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டீர்களா, ஆபிஸில் வேலை இல்லையா/ அதிகம் இருக்கிறது தப்பிக்க வேண்டுமா ஓடு spencer-க்கு என்று ஒடுகாலிகள்/ஒடுகாலர்களின் வேடந்தாங்கல் இந்த spencers. 

சரி ஒரு ரவுண்டு வருவோமே என்று கிளம்பினேன். கண்ணில் பட்டன கலர் கலராய். நான் பொருட்களைச் சொன்னேன். பார்த்தேன், ரசித்தேன். இதுவும் பொருட்களைத்தான், நீங்கள் நம்பித்தான் ஆகவேன்டும். பான்டலூன்ஸ், வெஸ்ட்ஸைட் - தி.நகரில், 200 சொல்லி 110க்கு கிடைக்கும் துணிகள் இங்கே சர்வ சாதாரணமாய் 1500-க்கு மேல். நானெல்லாம் பார்ப்பதோடு சரி. லேன்ட்மார்க். புத்தகப் பிரிவு. தமிழ் புக்ஸ் section. கடுப்பேறியது. ஆட்சியாளர்களுக்கு அதிகம் ஜால்ரா போடு அல்லக்கைகளின் கவிதைத் தொகுப்புகளும், காவியங்களும் பெருகிக் கிடந்தன. கடவுளே இந்த அரசியல் நுழையாத இடமே இல்லையா? 

கண்ணில் பட்டது " தெய்வத்தின் குரல்". காஞ்சிப் பெரியவர். பெரியவர் என்றால் தற்போது இருக்கும் கொலைக் குற்றவாளி அல்ல. அவருக்கு முந்தையவர். பிரம்மச்சர்யம் போதித்துவிட்டு நடிகையுடன் சல்லாபிக்கவோ, யோகாமையம் நடத்தி ஐட்டம் ஸாங்குக்கு குத்து டான்ஸ் போடவோ, பத்தாவது அவதாரம் நான் தான் என்று பீற்றிக் கொள்ளவோ செய்யாதவர். (இந்த மூன்று பேர் யார் என்று தெரியாதவர்களுக்கு பரலோக சாம்ராஜ்யத்தில் இடமில்லை). தனது காஷாயத்தை தானே துவைத்து, உலர்த்தி, கடல் கடக்க மாட்டேன், மோட்டார் வாஹனம் பயன்படுத்த மாட்டேன் என்று வாழ்ந்த ஒரு துறவி. மடத்திற்குள் அனைத்துச் சாதியினரும் வரலாம் என்று சொன்ன ஒரு நல்ல மனிதர். படித்தேன். மணிப்பிரவாள நடையில் சொல்லிருந்தார். ஒரு பக்கம் படித்தேன். தலை வலித்தது. கட்டாயமாய் ஒரு டபுள் ஸ்ட்ராங் பில்டர் காபி வேண்டும். 

நடந்தேன் சரவண் பவன் நோக்கி. காபி ஆர்டர் செய்தேன். ஏதேச்சையாய் கண்ணில்பட்டது ஒரு சாக்லேட். ஆம், கூந்தலின் நிறம், கண்ணின் விழி, உதட்டுச் சாயம் என் எல்லாமே சாக்லேட் பிரவுன் கலரில். அட, இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தைப் போல் அதள பாதளத்திற்கு இறங்கிய அந்த லோகட் டி-ஷர்ட், பொங்கும் காவிரியை அடக்கி வைக்க கபிணி படும்பாடு பட்டுக் கொண்டிருந்தது. ஆஹா அந்த டிஷர்ட்டும் சாக்லேட் பிரவுன் கலரில். அப்புறம் அந்த ஜீன்ஸ். அந்த மகராசிக்கு யாரவது போய் லோஹிப்புக்கும், அப்பர் தைக்கும் வித்தியாசம் சொல்லிக் கொடுத்தால் தேவலை. அப்புறமென்ன, கீழிடுப்பில் போட்டாலும் பரவாயில்லை, இந்த மடந்தை மேல் துடையில் அல்லவா போட்டிருக்கிறாள். அவ்வளவும் அப்பட்டமாய். அதையும் நாம் சொல்லக்கூடாது. அப்புறம் அகில உலக பெண்விடுதலைப் போராளிகளும், அண்ட பிரபஞ்ச முற்போக்குவாதிகளும் வந்து எமை ஆணாதிக்கவாதியென்றும், பிற்போக்குவாதியென்றும் சாடுவார்கள். 

அதுசரி. இப்படி உடை உடுத்தினால், இதனால் தமிழ் கலாச்சாரம் கெட்டா போய்விடும். பெயர் மட்டும் கனிவிழி, கயல்மொழி என்று வைத்துவிட்டால் போகிறது. அரசே அதைதானே சொல்கிறது. 4 ஐட்டம் ஸாங், 2 ரேப் ஸீன் இருந்தாலும், பெயர் மட்டும் தமிழில் இருந்தால் வரிவிலக்கு அளிக்கிறதே. இவ்வளவு ஏன், மலையாள பிட்டுப் படங்கள் கூட தமிழ் பெயரில் தானே ஓடுகின்றன வரி விலக்கிற்காக. எனக்கு அதிலெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. எனது சந்தேகம் எல்லாம் ஒரு தெரிவை அரிவையாகவோ, அரிவை மடந்தையாகவோ காட்டிக் கொள்வது எதோ ஆர்வக்கோளாறு எனலாம். ஆனால், பேரிளம்பெண்கள் தங்களை ம்ங்கைகளாகவும், மடந்தைகளாகவும் காட்டிக் கொள்ள முற்படுவது ஏன். அதுசரி இவர்களை நம்பித் தானே வெளிநாட்டு காஸ்மடிக் கம்பெனிகள் அடிக்கடி இந்தியப் பெண்களுக்கு உலக அழகி, பிரபஞ்ச அழகி என்றெல்லாம் பட்டம்கிடைக்கச் செய்கிறார்கள். 110 கோடி மக்கள் என்றால் சும்மாவா. எம்பூட்டு வியாபாரம். சிந்தனையைக் கலைத்தார், காபி கொண்டு வந்த சிப்பந்தி. 

ஸ்ட்ராங் காபி தான் கேட்டேன். பாவிகள் மோஸ்ட் ஸ்ட்ராங்கஸ்ட் காபியைக் கொடுத்திருக்கிறார்கள். ஜல் புயல் சென்னைக்கு ஏற்படுத்திய பாதிப்பை இந்த எழவு காபி என் கண்களூக்கு ஏற்படுத்தியது. ஆம் இருகண்களும் வெள்ளக்காடாகின. கடுப்பாய் திரும்பி "பில்" என்றேன். யெஸ் ஸார். சொன்னார்கள், சென்றார்கள். பில் மட்டும் தாமதமின்றி வந்தது. அது சரி ஆரியக் கூத்தாடினாலும் காரியமே குறி. பணம் கொடுத்தேன். மீதி சில்லரை. அவர்களாகவே டிப்ஸ் என்று வைத்துக் கொண்டார்கள். I've been taken for granted. மனது வலித்தது. 

வெளியே வந்தேன். மணி 2.45. நடந்தால் சரியாக் இருக்கும். நடந்தேன் சத்யம் தியேட்டர் நோக்கி. ஏதேச்சயாய் செல் போன் பார்த்தேன். 22 அன்ரெட் மெஸேஜஸ் என்றது. ஒவ்வொன்றாய் வாசித்தேன். என்ன ஆச்சர்யம் எல்லாமே தீபாவளி வாழ்த்துக்கள். சுரீரென்று உரைத்தது. இன்று தான் தீபாவளி. அடுத்த தீபாவளிக்குக் கட்டாயம் ஊருக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தேன், சென்ற வருடம் முடிவு செய்தது போல. சே. நான் கொண்டாடும் முன்னரே முடிந்து விட்டது. தீபாவளி. பொல்லாத வலி

என்னைக்குச் செத்தாலும்.....

ஆழிசூழ் உலகில் அன்பிற்கும், அன்பளிப்பிற்கும் ஏங்காத மனமே இல்லை என்பது ஓர் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. நட்பு, காதல் மற்றும் நானாவித சுற்றங்களும் அன்பளிப்பிற்காக ஏங்கித்தான் கிடக்கின்றன இப்பால்வெளியில்.
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது இரண்டாம்/மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது பெப்பர்மின்ட்டோ, கம்மர்கட்டோ அன்பளிப்புக் கொடுத்ததோ பெற்றதோ உண்டா. நீங்கள் உங்கள் வாழ்வில், முதண்முதலில் அன்பளிப்பாக என்ன கொடுத்தீர்கள் / பெற்றீர்கள். யாருக்கு/யாரிடமிருந்து. 
இல்லை- எனில் விட்டுவிடுங்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்வதற்குத் தானே இல்லை செய்வதற்கு என்று கேட்காதீர்கள். செய்வதற்கும் ஒன்றும் இல்லை. முனைப்பற்ற அகத்தேடலில் உங்கள் வாழ்வு கழியட்டும்.

ஆம் - எனில் எங்கே சொல்லுங்கள் அந்த அன்பளிப்பினை அளித்த அல்லது பெற்ற அந்த நண்பன்/தோழியின் பெயர் ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு. அந்த நண்பர்/தோழி தொடர்பில் இருக்கிறாரா இன்றும் உங்களுடன். 

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முதலாக பள்ளியில் அன்பளிப்புக் கொடுத்த தோழியின் பெயர். அவளது பெற்றோர் வகுப்பறையில் விட்டுச் சென்றவுடன் ஓ ஊ என்று ஒரே அழுகை. ஆசிரியையோ இரண்டு முறை சொல்லிப் பார்த்துவிட்டு பளார், பளார் என்று கண்ணங்களைப் பழுக்க வைத்தார். அவள் மேலும் வீறுகொண்டு (வீறிட்டு) அழுதாள். எப்போதும் அடுத்தவரிடம் இருப்பதைப் பிடுங்கி மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்ட நான் எனது சட்டைப் பாக்கெட்டில் தேடி ஒன்றுமே இல்லை என்பதால் அருகிலிருந்த, அன்று வரை யார் என்றே தெரியாத, அநதச் சிறுவனிடம் இருந்து இருந்த கம்மர்கட் மிட்டாய்களில் ஒன்றைப் பிடுங்கி அவளிடம் நீட்ட நின்றது அவள் அழுகை. பிறகு அந்தக் கம்மர்கட் அவளின் மாமூலானது. கம்மர்கட் மட்டும் அல்லாது, பெப்பர் மின்ட், சீனிமிட்டாய், பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய் என்று எமது நண்பர்களோடு சேர்ந்து வளர்ந்தது எமது நட்பு. 'பாலினம்" என்ற பேதம் அறியாத நட்பு. நடுநிலைப் பள்ளிகள் பிரித்தன. நட்பு தொடர்ந்தது. அவள் வாயாடியாகவும், நாங்கள் தறுதலைகளாகவும், வளர்ந்தோம்.

கல்லூரி ராகிங்கில் அவளைக் "கருவாச்சி" என்றழைத்த அவளது கல்லூரி சீனியர்களைப் பற்றி அவள் தறுதலைகளில் ஒன்றிடம் சொல்ல, உடனே தற்போது ஒரு பன்னாட்டு கட்டுமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவில், தேசிய அளவில் உயர் பதவி வகிக்கும் அப்போதைய தறுதலையும், தற்போது லன்டன் துரைகளுக்கு அவர்தம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும், அந்நாளைய கூளக்கெடாவை அழைத்துக் கொண்டு நேரேக் கல்லூரிக்கே போய், "எவடி அவ எங்க புள்ளய கருவாச்சினு கேட்டவ. அந்த வெள்ளக்காரி எவடி ? வாடி முன்னால. ஏன்டி உங்கம்மாளுக ஒங்கள எல்லாம் என்னா வெள்ளக்காரனுக்க பெத்தாளுக? எங்க புள்ளையப் பாத்துக் கருவாச்சினு கேக்க. என்று ஆரம்பித்து, கிழித்துத் தோரனம் கட்டிவிட்டு வந்துவிட்டார்கள். அவளே ஓரிரு நாட்கள் கழித்து "அடப்பாவிகளா நீங்க அவ்ளோ பெரிய ரௌடிகளாடா?" என்று கேட்டுச் சிரித்தாள். அவளுக்கு அதன் பின் ராஜ மரியாதை கல்லுரியில் கிட்டத்தட்ட ஒரு தாதாவாக வலம் வந்திருக்கிறாள் அந்த மகளிர் கல்லூரியில்.இந்த மிரட்டலும், அன்பளிப்பே. ஆம் உண்ட இறைச்சியில் ருசி மிகுந்த துண்டத்தைச், சுவைத்துப் பார்த்து, பரமனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்த கண்ணப்பரைத் தெரியும் தானே உங்களுக்கு 

தொடர்ந்தது நட்பு.கல்லூரி தாண்டியும். எங்கள் நட்பைப் புரிந்து கொள்ளாத, தவறாய்ப் பார்க்கும் கண்கள் பாவம் செய்தவை.

வேலைக்காக சென்னை வந்த அவள், எக்மோரில் இறங்கியதும் முதலில் தொடர்பு கொண்டது எங்களைத்தான். அவள் ஆஃபர் லெட்டருடன். நானோ( நாங்களோ) வேலை தேடிக்கொண்டு. ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுப் பின்னர், அவளை வண்டியில் அமரவைத்து இது தான் எல்.ஐ.சி பில்டிங்கு, இது ஸ்பென்ஸர் ப்ளாஸா, இது தான் ஜெமினி ஃப்ளை ஓவர் என்று காட்டிகொண்டே வந்ததும் அவள் அந்தக் கம்மர்கட்டைப் பார்த்த அதே குதூகலத்துடன் கண்கள் விரிய பார்த்தபடி வந்ததும் ஏதோ போனவாரம் பார்த்த சினிமா போல் நிற்கிறது மனதில்.

அவள் திருமனத்தில் நாங்கள் அடித்த கூத்துக்களை அதிகம் ரசித்தது அவளது கணவர் தான். 

கடந்த வருடம் அவளுக்குக் குழந்தை பிறந்திருந்த போது அவளைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றபோது குழந்தை பிறந்து இரண்டு நாட்களாகி விட்டிருந்தது. இரண்டு நாளும் போகமுடியாமற் போனதற்குக் காரணம் எங்கள் நண்பர்களில் ஒருவன், இன்று வேண்டாம் என்று இரண்டு நாட்களும் தடுத்ததே. 

நாங்கள் சென்ற போதும் அவன் வரவில்லை. "நீங்க அங்க வந்துருங்க. எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேல இருக்கு" என்று சொன்னவன், தாமதமாய்த் தான் வந்தான் மருத்துவமனைக்கு. யாரிடமும் எதுவும் பேசாமல், அவளருகில் சென்றவன், "இனிமேலாச்சு சேட்ட பண்ணாம, உங்க வீட்டுக்காரர் பேச்சக் கேட்டு நட", என்று சொன்னவன், கைகளை நீட்டினான்.அவன் கைகளில் ஒரு பாக்கெட் கம்மர்கட்.

ரெண்டுநாளா இதுக்குத்தான்டா அலஞ்சேன், என்று அவன் சொல்லவும், அவள் அவளது கணவரைக் கட்டிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏதோ செய்கிறது மனதை, இப்போது நினைத்துப் பார்த்தாலும். அதுவரை, அவள் அழுகையை நிறுத்தவும், கோபத்தைக் குறைக்கவும் மட்டுமே செய்த/பயன்பட்ட கம்மர்கட் முதல் முறை அவளை அழ வைத்தது. 
அடுத்த நாள் மாலை அவளது கணவன் அழைத்து, நீங்க எல்லாரும் போன அப்புறம் அவ யார்கூடவும் பேசவே இல்லங்க. எப்பப் பாரு எதாச்சு சொல்லி என்னோட சண்ட போட்டுட்டு இருப்பா, இல்ல எதாச்சு சேட்ட பண்ணீட்டு இருப்பா. அவ அமைதியா இருந்தா மனசு கஷ்டமா இருக்குங்க என்று சொன்னபோது நெகிழ்ந்தது மனது. 

************************************ 

அன்னதாதா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாவிட்டால் அது உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம். உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு அன்பளிப்புக் கொடுக்க நினைத்து சூழ்நிலை கைதியாகி இயலாமையை நொந்து இருக்கிறீர்களா?

2003 -ஆம் வருடத்தின் செப்டம்பர் மாதம்.

கோயில்மாடு, கூளக்கெடா, தலப்பெரட்டு,கண்டச்சனி, சோத்துமாடு, தறுதல, ஏழ்ர, கெடமாடு, வில்லங்கம்,ஊரெழவு,கந்தரகோலம், மலமாடு, திருகுதாலம் என்றெல்லாம் மதுரைவாழ் மக்களால் "அன்போடு" அழைக்கப்பட்ட நாங்கள் இருபத்தியாறு பேர் சென்னை வந்தடைந்தோம். பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாம்பலத்தில் நின்றதும், இறங்கி அழைத்தோம் நண்பனை.

எங்கள் குழுவில் அவன் மட்டும் தான் அப்போது உத்யோகஸ்தன். இந்தியாவின் முதல் மூன்று மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றில் அவனுக்கு வேலை. ஐந்து இலக்க சம்பளம். "பங்காளிகளா வாங்கடா வாங்கடா. வராமப் போயிருவீங்களோன்னு பயந்துக்கிட்டுக் கெடந்தேன்டி பங்காளியா, வாங்க போவோம்" என்று அழைத்துச் சென்றான். 

டீக்கடையில் டீ குடிப்பதற்கு முழு நூறு ருபாய் நோட்டை அவன் மாற்றிய போது என்னவோ போலிருந்தது எங்கள் எல்லோருக்கும். இத்தனைக்கும் நாங்கள் இருபது வருடமாய் நண்பர்கள். நல்லதோ கெட்டதோ சேர்ந்தே செய்துதான் பழக்கம். ஆனால் இது புதிது எங்களுக்கு. அவனோ மும்முரமாய்ச் சொன்னான் மாஸ்டரிடம் " எண்ணே 19 டீ, அதுல 2 ஸ்ட்ராங்கு, 8 காபி அதுல 3 மூனு ஸ்ட்ராங்கு, ஒன்னு லைட்டு என்று.என் மனம் சொன்னது "சம்பாதிச்சு இவனுக்கு எதாவது பெரிசா செய்யனும். இல்ல நாக்கப் புடுங்கிக்கிட்டு செத்துரனும்" என்று. எங்கள் இருபத்தியாறு பேரின் மனமும் அதையே தான் சொன்னது என்பதைப் பின்னால் அறிந்தபோது நெகிழ்ந்தோம். 

நாங்கள் சென்றவுடன் அவன் செய்த முதல் நல்ல காரியம் எல்லோருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் மாத டோக்கன் வாங்கிக் கொடுத்தது தான். அன்னதாதா அவன் எங்களுக்கு. அலுவலக நிகழ்ச்சிகளில் உணவு விருந்து இருந்தால் எங்கள் அனைவரையும் அழத்துச் செல்வான், அவனது அலுவலக நண்பர்களின் பாஸ்கள் எல்லாவற்றையும் வாங்கி. நாங்களும் தேடினோம் வேலையை. 


அவன் வீட்டிலோ அவனுக்கு திடீரென்று திருமன ஏற்பாடு. "டேய் நானு ஊருக்குப் போறேன் இந்த வாரம். யாரெல்லாம் வர்ரது" என்ற கேள்விக்கு " நீ போய்ட்டு வாடா" என்று அனுப்பி வைத்தோம். 
ஊரிலிருந்து வந்தவன் தொங்கிய முகத்துடன் சொன்னான். "மாப்ள ஊருக்கு வரச் சொல்லிப் பெருசுக கழுத்தறுத்துருச்சுகடா. எங்க அக்கா மக *****புள்ள இருக்குல்ல, அந்தப் புள்ளைக்கும் எனக்கும் கல்யானம்டா" என்றவனை, கட்டித் தழுவிக் கேட்டோம் அதுக்கேன்டா எழவு சொல்ற மாதிரி சொல்ற என்று. 

அவனது பதில்"போங்கடா பேப்பய புள்ளைகளா. கல்யானமாகி நானு எம்பொண்டாட்டியக் கூட்டிகிட்டுப் போயிருவேன், நீங்க செலவுக்கு என்னடா பண்ணுவீங்க அறிவு கெட்டவய்ங்களா" பொட்டுக்குழியில் சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு எங்களுக்கு. எங்களில் இருவருக்கு வேலை கிடைதத பின் திருமனத்திற்கு ஒப்புக் கொண்டான். எங்கள் நேரம் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆனால் தான் சம்பளம் கொடுப்போம் என்று அலுவலகம் சொல்லியது. திருமனமோ இரண்டாவது வாரத்திலேயே வந்தது. மதுரையில், திருப்பரங்குன்றத்தில் திருமனம். பஸ்ஸுக்குக் கூட பணம் இல்லை. இதில் அன்பளிப்பு செய்வது எங்கே. மொய் செய்யாமல் சாப்பிட்டு வந்தோம்


திருமனம் முடிந்த பின் சென்னையில், மனைவியுடன் வேறு வீடு பார்த்துக் கிளம்பிய அவனுடன் போனில் பேசுவதோடு சரி. வீட்டிற்கு அவனும், அவன் மனைவியும் வருந்தி அழைத்தும் செல்லவே இல்லை. மிகுந்த வற்புறுத்தலின் பேரிலும், சென்னை வந்ததால் இழந்திருந்தஞாயிறுகாலை - இட்லி, கறிக்கொழம்பு - சாப்பிட அடிமனது ஏங்கியதாலும் அவன் வீட்டிற்குச் செல்ல, பேரதிர்ச்சி. அவனது மாமனாரும், மாமியாரும் வந்திருந்தனர். சொல்லாமல் கிளம்பி வரும் விருந்தினர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பது எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்குகிறது பாருங்கள். எங்களிடமே கேட்டுவிட்டார் மாமனார். "ஏப்பா இன்னமும் இப்படிதானா இருக்கீக" என்று. ஆயினும், நண்பனும், எங்களை அண்ணே என்று அழைக்கும் அவனின் வெள்ளந்தி மனைவியும் மனம் நோகலாகாது என சம்பிரதாயமாய் உணவருந்திக் கிளம்பினோம். 


பின்னாளில் அனைவரும் செட்டிலாகி, அயிரம் ரூபாய் ஒருவேளைச் சாப்பாட்டிற்கும், சில ஆயிரங்கள் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்கும், லட்சங்கள் லட்சியமற்றும் புரண்ட சுபவேளையில், நண்பனின் மனைவி பிரசவத்திற்காக மதுரை சென்று விட, காய்ந்த மாடுகள் நாங்கள் அனைவரும் ஒரு சனிமாலை( மாலையிட்ட சனி?) அவனது அழைப்பின் பேரில் அவன் வீட்டிற்குச் சென்று கம்பங்கொள்ளை ஆக்கினோம். 


மறுநாள் மதியம் போல் ஒவ்வொருவராய் கண்விழிக்க, ஒட்டுமொத்த அப்பார்ட்மென்ட்டும் வீட்டு வாசாலில். எதோ ஒரு பொண்டாட்டி தாச ஜந்து கேட்டது. செகரட்ரியாம்."என்ன சார் நெனச்சீங்க. அப்பார்ட்மென்ட் ரூல்ஸ் தெரியுமா? யார் யாரையோ கூட்டிட்டு வந்து நைட்டு பூராம் ஒரே கூத்து. எவ்வளவு சவுண்டு. என்னென்ன பேச்சு. அதுவும் பச்ச பச்சயா எல்லா சினிமா நடிகையவும் ஒவ்வொருத்தரா இழுத்து வச்சு".

உற்சாக பாணம் அருந்தினால் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து 4 விதிகள் உள்ளன 1) சினிமா நடிகைகள் பற்றி 2) அரசியல் 3) காதல் ( பெரும்பாலும் தோல்வி, மற்றும் தன்னைக் கழட்டி விட்ட பெண்ணின் குடும்பத்தைப் பற்றி) 4)உலகமயமாக்கல், புவிவெப்பமுறுதல் போன்ற உலகளாவிய தலைப்புக்கள். தமிழ்க்குடி மக்களின் இந்த அடிப்படை கூடத் தெரியாத அந்த T-ஷர்ட் ஜந்துவை எவன் செகரட்டரி ஆக்கினானோ தெரியவில்லை.


மது அருந்தாத இரண்டு பேர் நானும் இன்னொரு நண்பனும். போதையில் இருக்கும் அவர்களிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதால், எங்களிடம் பேசினார்கள், ஏதோ பிரயோஜனம் இருக்கப் போவது போல் எண்ணிக் கொண்டு. "காலேல வந்து பாத்தா கதவு தட்னா தொறக்கவே இல்ல. என்ன சார் இது. நாங்க எல்லாம் ஃபேமிலி இருக்கோம் சார்" என்றவரை நண்பன் சமாதானப்படுத்த முயல, அதற்குள் கெடமாடுகளில் ஒன்று "நாங்க தான் பேசுனோம் நீங்க ஏன் கேட்டீங்க. கண்ண மூடித் தூங்க வேண்டியது தான. பெரியமனுஷன் தான நீங்க ? ஒட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தீங்களா? வெக்கமா இல்லையா" என்று எங்கள் பாரம்பர்யப் பேச்சு உத்தியைக் கையாள, விஷயம் முற்றி நான்கு தெரு தள்ளி வசிக்கும் ஹவுஸ் ஓனர் வரை சென்று அவரும் வீட்டைக் காலி செய்ய சொல்லிவிட்டார். நண்பனும் "சரி சார் ரூல்ஸ் படி மூனு மாசம் டயம் குடுங்க" எனவும் அதெல்லாம் முடியாது என்று அசோசியேசன் முறுக்கிக்கொண்டு நிற்க, பின்னர் வேறு வழியின்றி " ஆமாடா அப்டித்தான்டா செய்வாங்க எங்க பசங்க. நீங்க எல்லாரும் சேந்து என்னா கழட்ட முடியுமோ கழட்டிக்கோங்கடா, ஆனதப் பாருங்கடா. என்னடா போலீஸ்னாப் பயந்துருவோமா. அதுக்கெல்லம் வேற ஆள் பாரு, எங்க கூப்புடுங்கடா போலீசப் பாப்போம்" என்று அனைவரையும் சகட்டு மேனிக்கு ஒருமையில் சாடி, நண்பன் முற்றுப்புள்ளி வைத்தான்.

மேய்ப்பனற்ற மந்தையாடுகள் களைந்து சென்றன. கெடமாடுகளோ " அதுதேன் காலி பண்றதுன்னு ஆகிப்போச்சு அப்புறம் இவய்ங்களுக்கு என்ன மாப்ள மரியாத " என்றவாறு அடுத்த ரவுண்டுக்குத் தயாராகின. லட்சங்கள் இலகுவாகப் புரட்டும் நிலையில் இருந்த தறுதலைகள் உருப்படியாய் ஒரு காரியம் செய்தன. ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து, மொத்தமாய்ச் சேர்த்து, ஒரு கிரவுண்ட் இடம் வாங்கின நண்பன் பெயரில். நல்லவேளையாக அப்போது விற்பவர் மட்டும் கையொப்பமிட்டால் போதும் என்பதால் நன்பனுக்குத் தெரியாமலேயே அவன் பெயரில் இடம் வாங்க முடிந்தது. பிறகு வீடு கட்டத் துவங்கி சரியாக 53 நாட்களில் வீடு ரெடி. அரை கிரவுண்டில் வீடு. மீதித் தோட்டம்.பெயின்டிங்க மட்டும் பாக்கி. அவனுக்குப் பிடித்த ஸ்கை ப்ளூ அவுட்டர் ஷேடும், பிஸ்தா க்ரீன் இன்னர் ஷேடும் என பெயின்டிங்க் நடந்து கொண்டிருக்க அவன் அப்பாவாகிறான். 

ஊருக்குக் கிளம்ப இருந்தவனை இருடா ஒரு முக்கியமான விஷயம்டா என்று சொல்லவும், அவன் செய்த அடுத்த வேலை அவன் மனைவிக்கு அலைபேசியது. "நான் கெளம்பிட்டேன் ஒரு 30 மினிட்ஸ்ல் ஏர்போர்ட் வந்துருவேன். ஆமா பத்து மனிக்குத் தான் ஃப்ளைட். மதிய சாப்பாடு நம்ம ரெண்டு பேரும் சாரி மூனு பேரும் சேந்து தான் சாப்பிடுறோம்" என்றவனை அழைத்துச் சென்றோம் கட்டிடத்திற்கு, அவனோ எங்கடா கூட்டிட்டுப் போறீங்க என்றபடியே வந்தான். வீட்டின் அருகில் நிறுத்தவும், ஒரு கணம் வீட்டையே பார்த்தவன், சொன்னான் "சம்பாதிச்சு இப்டி ஒரு வீட்டக் கட்டிப்புடனும் மாப்ள". தறுதலைகளில் ஒன்று சொன்னது "மாப்ள கட்ன வீட்ட எதுக்குடா ஈனொரு தடவ கட்டனும், எல்லாம் ஏற்கனவே கட்டியாச்சப்பா. பெயின்டிங் தான் பாக்கி" என்று தொடங்கி, விஷயத்தை விளக்கவும், அவன் செயலற்றுச் சொன்ன வார்த்தைகள் " மாப்ள நானு எப்பச் செத்தாலும் சரிடா, என்னைய இங்கயே பொதச்சுருங்கடா". 



வாங்கிக் கொடுத்த கம்மர்கட்டும், கட்டிக் கொடுத்த வீடும் அன்பளிப்புக்கள் அல்ல.

தோழிக்கு - அவ அமைதியா இருந்தா, எதோ மாதிரியா இருக்குங்க. எங்கம்மா கூட என்னடா எலியும் பூனையுமா சேட்டப் பண்ணுவீங்க, என்னா ஆச்சு, எதும் பிரச்சனையா அப்டின்னு கேகுறாங்க என்று சொன்ன அவள் கணவன், அவளை, அவளின் சுட்டித்தனத்தை ஏற்றுக்கொள்ளவும், ரசிக்கவும் வைத்தது தான் அவளுக்கு எங்களின் அன்பளிப்பு. 

நண்பனுக்கு - மாப்ள செஞ்சா சரியாத்தான் இருக்கும். நாங்கூட என்னமோ நெனச்சேன். ஆனா நீங்க பெரிய ஆளு மாப்ள என்று அவன் உறவுகளெல்லாம் அவனைப் பிரமித்துப் பார்க்க வைத்தது தான் எங்களின் அன்பளிப்பு. 


எங்களுக்கு அவர்களின் அன்பளிப்பு ? எங்கள் அரட்டைக் கச்சேரியில் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் தோழியின் கணவனும், நண்பர்களின் மனைவிமார்களும். 

Wednesday, 21 December 2011

எந்நேரமும் காதல் காலை மாலை ராத்திரி (ராத்திரி) -காதலால் ஒளிர்ந்த இரவு

காதலால் ஒளிர்ந்த இரவு

இரவின் மடியில் துயிலும் பொழுதில்
இருகண்மூடி என்னருகே உறங்கிகொண்டே
கனவிலும் வந்து காட்சிகொடுத்து
உறக்கம் கெடுக்கும் தேவதையை
நினைத்தபடியே புரண்டு படுக்கும்
தருணங்களில் திறந்திடும் கண்களில்
தற்செயலாய்த் தெரியும் தேவதையின் முகம்.

தூக்கம் பறந்தோட ரசிகன் உயிர்பெற்று
கண நேரத்தில் பரிணாம வளர்ச்சியுமுற்று
கவிஞனாகிக் கட்டிலில் சம்மனமிட்டு
மடியில் வைத்த தலையனையை விடவும்
மிருதுவான தேவதையின் முகத்தை
ஒப்பிட முயன்று ஒப்பேதும் இல்லாத
உண்மை உணர்ந்து ஞானியாகிறான்.

நைட் லேம்ப்பின் மங்கிய ஒளியிலும்
பளிச்சென தெரிகிறாள் என் தேவதை
ஒருவிரல் கொண்டு கண்ணம் தொடுகையில்
சற்றே நெளியும் அவளிரு புருவங்களும்
அந்தக் கணநேர கண் இமைச் சுருக்கங்களும்
எந்தக் கவிஞனுக்கும் சாமி கொடுத்த வரம்.
எனக்கோ என் தேவதையால் வாய்க்கிறது தினம்.

தூங்கும் போதும் அழகாய்த் தெரிய
தேவதைகளால் மட்டுமே முடியும் என்பது
என் தேவதை தூங்கும் அழகைக்
கண்ணால் கண்ட பின்னரே எனக்குப் புரிந்தது

தூக்கத்திலும் புன்னைக்கக் கற்றுக்
கொடுத்தது யார் என் தேவதைக்கு.
வான்நிலவே பூமிவந்தாலும் ரசிகர்
மன்றம் வைக்கும் அவள் புன்னகைக்கு

உடல்சார் உணர்வுகளால் இயங்கி முடித்து
கலவியிற் களைத்த மனைவியை ரசிக்க
உடல்கொண்ட எவனாலும் முடியுமிங்கே

உள்ளத்தாற் கூடி ஓரலையில் ஓடி
சொர்க்கமது தேடி பேரின்பம் நாடிக்
களைக்கச் செய்யவும், களைத்தவளை
ரசிக்கவும் கவிஞன் வேண்டுமங்கே.


உடலெனும் மாயை மறைந்து
மனமெலாம் காதலெனும்
ஞானம் மட்டும் நிறைந்து
உள்ளத்துச் திசுக்களில்
காதலெனும் உணர்வூறி
உணர்வுகள் இடம் மாறி
மன மொழி மெய் கடந்த
பேரின்பப் பெருவெளியில்
தோன்றும் தேவதையின் முகம்.

ஏஸி மெஷினின் சப்தம் தவிர்த்து
எங்கும் நிறைந்த இரவின் நிசப்தம்
சாட்சி சொல்லும் காமம் கடந்த
நைஷ்டிக சந்நியாசக் காதலுக்கு.

கதவிடுக்கின் வழியே கசிந்த காதல்
மெல்ல மெல்லக் காற்றில் கலந்து
ஆக்சிஜனுக்கும் உயிரூட்டி
பூமிப்பந்தைக் காதலில் நனைக்கும்.

சற்று நேரத்தில் லௌகீகக்
கடமைகள் தொடங்குவதற்காய்
புலரக் காத்திருக்கும்
காதலில் நனைந்த உலகம்.

நிசப்த தேரேறி உலகை வலம்வரும்
காதலால் ஒளிர்ந்த இரவு.

எந்நேரமும் காதல் காலை மாலை ராத்திரி (மாலை)

விடுமுறை நாட்களின் அழையா
விருந்தாளியான மதிய உறக்கம்
களைந்து எழுந்து சோம்பல் முறிக்கும்
என் தேவதையால் மின்னிடும் மாலைப் பொழுது.

உறங்கிக் களைத்த முகத்துடன்
"வீக்லி 2 சன்டேஸ் வந்தா நல்லாருக்கும்ல"
எனக் கேட்டுச் சிரிக்கும் என் தேவதையின் புன்னகை
என்னைக் கால தேச வர்த்தமானங்கள்
கடந்த ஓர் பேரின்பப் பெருவெளிக்கு அழைத்துச் செல்லும்

"மூவி போலாமா ப்ளீஸ்" எனக் கேட்கும் நொடியில்
என் தேவதை பார்க்கும் கெஞ்சல் பார்வையில்
போகோ சாணல் மாற்றச் சொல்லிக் கேட்கும்
5 வயதுச் சிறுமியின் சாயல்

ஓகே சொல்லி தலையசைத்ததும் அவள்
முகம் காட்டும் சந்தோஷ ரேகைகள்
தீர்க்கமாக்குகின்றன என் ஆயுள் ரேகைகளை.

எத்தனை முறை சென்றாலும்
அலுப்பதே இல்லை கடற்கரையும்
கடற்கரை மணலும் கடலின் அலையும்
அருகே இருக்கும் என் தேவதையால்

கடலின் அலைகளில் ஒடிப்பிடித்து
விளையாடும் குழந்தைகளைக் கண்டதும்
"நம்ம குழந்தயா இருக்கப்பவே
கல்யாணம் பண்ணிருக்கலாம்ல ப்ச்
இப்ப நம்மளால பாக்க மட்டும் தான் முடியுது"
எனும் என் தேவதையின் ஏக்கம்,
குழந்தைத் திருமணத்தைத் தடை
செய்தவனைத் தேடிப் பிடித்துத் தூக்கில்
போடச் சொல்லி வெறியேற்றும்.

கடற்கரைக் காற்றில் அலையும் கூந்தலை
என் தேவதை கோதும் லாவகம்
சத்தியமாய்ப் பயிற்சி வேண்டும்.

மிளகாய் பஜ்ஜி கடித்த நொடியில்
இருகண்மூடி தோள்கள் உயர்த்தி
ஸ்ஸ்ஸ்ஸ் என்று எழுப்பும் சங்கீதம்
என் அடிமனதில் தேங்கி நிற்கும்
அடுத்த சங்கீதம் கேட்கும் வரை.

இத்தனை தான் என வரம்புகள் நில்லா
எத்தனையோ ரம்யமான நினைவுகள்
இவைகள் போதும் என் வாழ்வில்
ஒவ்வொரும் மாலையும் பொன்மாலையே

பெண்வடிவத் தேவதை அருகிருக்க
பெண்மாலை அவளை நான் அருகிருந்து ரசிக்கும்
ஒவ்வொரு மாலையும் பொன்மாலையே.

எந்நேரமும் காதல்...... காலை மாலை ராத்திரி( காலை )

படபடக்கும் பட்சிகள்
சலசலக்கும் தென்றல்
தகதகக்கும் நதிநீர்
இவை ஏதும் இல்லாதபோதும்
இனிமையே எமக்குக் காலைப் பொழுது

களங்கமற்ற முகத்துடன்
கண்மூடித் தூங்கும் தேவதை
கண்விழித்ததும் நித்தம்
நான் பார்க்கும் முதல் காட்சி

கண்மூடித் தூங்குகையில் கனவில் வருபவள்
கண்விழித்ததும் கட்டிலில் என் அருகினில்
கனவோ நினைவோ தேவதை தரிசனம்
நிச்சயம் உண்டு நித்தமும் எனக்கு.....

அதிகாலைத் பொழுதினில் அயர்ந்துறங்கும்
தேவதையின் தரிசனம் காண்கையில்
திடீரெனக் கண்விழித்து
"தூங்கும் போது கூட என்ன விட மாட்டியா?"
எனக் கேட்டு கேலியாய் கண்சிமிட்டும் காலைப் பொழுதுகள்
என் நினவெனும் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில்....


"ம்ம் ம்ஹும் ம்ஹும்" எனச் சினுங்கியபடியே
"சன்டே தான கிவ் மீ ஒன் மோர் ஹவர்"
என்னும் என் தேவதையின் கோரிக்கையை
என்றுமே நிராகரித்ததில்லை.......



களைப்பு மிகுந்து அயர்ந்து உறங்கிடும் நாட்களில்
காபிக்கோப்பையுடன் "குட் மார்னிங்"
என்னும் என்குரலுக்குக் கண் விழித்து
"அய்யோ செவன் தேர்ட்டியா? எழுப்பிருக்லாம்ல"
எனப் புருவங்கள் உயர்த்திக் கேட்கும் போது
என் தேவதையின் முகபாவங்கள்
என்றைக்கும் மதிப்புக்குறையா பொக்கிஷங்கள்......
கள்ளச் சிரிப்புடன் கைநீட்டும்போது
காபிக்கோப்பையை மட்டுமே தர முடிகிறது என்னால்....
உயிரும், நினைவும் ஏற்கனவே அவளிடத்தில்தான்
சொல்லாமலே எடுத்துக் கொண்டாள், அவளை அறியாமலேயே....

ஏமாறாதே மழையே (புதன்கிழமை)

மழைக்கால அதிகாலையில்,
ஏஸியின் குளிருக்கும்,
போர்வையின் கதகதப்பிற்கும்
நடந்த போட்டியின் முடிவு வேண்டி
படுத்தே இருந்தவனின் போர்வையை
விலக்கிப் புன்னகைக்கும் தேவதை.

அலுவலகம் கிளம்ப வேண்டுமே
என பதறி எழ "லீவு தானப்பா"
சொன்னவள் சத்தியமாய் தேவதையே.
"பக்ரீத்தை"க் கண்டுபிடித்தவன் வாழ்க!
உலகோர் பக்ரீத்தை அடிக்கடி கொண்டாடுக!

அதிகாலை மழையின் ரம்யத்தில்
"மிங்" வம்ச சைனாவாய் திருவில்லிக்கேனி.

பலகனி அமர்ந்து மழை ரசிக்கையில்
"பாரோ" மன்னன் போன்றோர் உணர்வு.

"என்னப்பா ட்ரீமிங்கா " கேட்டவள்
தேநீர் கொடுத்து வாய்பேசாது
புருவம் விரித்தாள் அகலமாய்.

அவள் மழையை ரசிக்க நான் அவளை.

முத்தம் கொடுத்துச் சிரிக்கும் மகவு
மிட்டாய்ப் பார்த்து மகிழும் குழந்தை
பட்டுப்பூச்சி ரசிக்கும் சிறுமி என
முப்பரிமானத்தில் என்னவள்.
இவள் ரசிப்பதற்காகவே மழை வேண்டும்.

நாசியின் நுனியில் தெறித்தது மழையின் துளி.
அந்த நொடியில் அவளின் சிரிப்பு
என்வாழ்வின் மொத்த சம்பாத்யம்

வாரநடுவில், புதன்கிழமையில்,
விடுமுறையன்று பெய்த மழையில்
சிறுமியாய் தெரிகிறாள் என் தேவதை.

தேவதை அவள்ரசிக்க சின்னதாய் ஓர்மழை
அவளின் சிரிப்பிற்கு ஜம்மென்று ஓர்மழை
பித்தனாய் எனைமாற்றும் வித்தைக்கு ஓர்மழை
நித்தமும் மூன்றுமுறை மழைபெய்ய வேனுமே.

மொட்டைமாடியில் மழையில்நனைகையில்
சட்டென்று மழைநிற்க அப்பார்ட்மென்ட்
குழந்தைகளுடன் வாடிய அவள்முகத்தில்
தெரிந்தது ஐந்து வயதுச்சிறுமியின் ஏக்கம்

ஏக்கம் உணர்ந்து கொட்டிய மழையை
ஊரே தூற்றியது.
நான் மட்டும் தான்......


அவள் மேனிதழுவிய சுகமறிந்து
நித்தம் அந்தச் சுகம்வேண்டி
அவள் தரிசனத்திற்காகத்தான்
பெய்கிறது சென்னையிலும் மழை.

ஒருமுறை தழுவிய திருட்டு மழைக்கு
மறுமுறை வாய்ப்பளிக்கவில்லை தேவதை
வருவாள் அவள்மறுபடி என்ற நம்பிக்கையில்
பொழிகிறது, பாவம் அப்பாவி மழை.

ஏமாறாதே மழையே! நித்தமும் பெய்து.
ஏமாறாதே மழையே! நித்தமும்வந்து
என்னவள் எப்பொழுதுதாவது தான்
உன்னை ரசிப்பாள்.
அவள் நித்தமும் ரசிப்பதற்கும்
அவளை ஒவ்வொரு நொடியும் ரசிப்பதற்கும்
அருகிலேயே நானிருக்கிறேன்.

Monday, 18 April 2011

செவ்வாய் ( மோகனச்செவ்வாய். )

பற்களை ஒளித்து உதடுகளிலேயே சிரிக்கும்.

வரத்தாமதமாகும், ஆட்டோ பிடிக்கவும்
என்ற குறுந்தகவல் படித்ததும், அழைத்து
"நைட் வந்துருவீங்கள்ல" என்று பரிவாய் கேட்கும்.

தாமதமாய் வீடு திரும்பும் நாட்களில்
கார் நிறுத்தும் சத்தம் கேட்டு, 2 கதவு திறந்து
எதிர்பட்டதும், என்னப்பா? ரொம்ப டென்சனா என்று வினவும்.

குழந்தைத்தனமாய் நான் செய்யும் சேட்டைகளை
ரசித்து, பூரித்து, கள்ளமின்றிச் சிரிக்கும்.

பேஷன் சாணல் பார்த்து மாட்டி அசடு வழிய
பல் இளித்தால் "ஏன் இந்த வேல" எனக் கேட்கும்

காரோட்டும் போது, பெடஸ்ட்ரியனில் சாலை கடக்கும்
பெண்களின்பக்கம் எதேச்சயாய் கண்கள் திரும்பினால்
மௌனமாய்ப் புன்னகைத்து தடுக்கும்.

ரம்யமான எகாந்தச் சூழ்நிலைகளில் காதல் பொங்க
என்னை ஒருமையில் அழைத்துவிட்டு, குறும்பாய்ச் சிரிக்கும்.

என்மனமறிந்து, பேசும். பாடும்.

தகப்பனின், சொட்டைத் தெலையைப் பகடி செய்தால்
மட்டும் எமைப் "பொறுக்கி" என்று சாடும்

என் தேவதையின் மோகனச் செவ்வாய்.

எம் எழுத்தை என்றேனும் ஒரு நாள் வாசிக்கும்.








என்றென்றும் அன்புடன்
மதுரை இராஜா