Wednesday, 21 December 2011

எந்நேரமும் காதல்...... காலை மாலை ராத்திரி( காலை )

படபடக்கும் பட்சிகள்
சலசலக்கும் தென்றல்
தகதகக்கும் நதிநீர்
இவை ஏதும் இல்லாதபோதும்
இனிமையே எமக்குக் காலைப் பொழுது

களங்கமற்ற முகத்துடன்
கண்மூடித் தூங்கும் தேவதை
கண்விழித்ததும் நித்தம்
நான் பார்க்கும் முதல் காட்சி

கண்மூடித் தூங்குகையில் கனவில் வருபவள்
கண்விழித்ததும் கட்டிலில் என் அருகினில்
கனவோ நினைவோ தேவதை தரிசனம்
நிச்சயம் உண்டு நித்தமும் எனக்கு.....

அதிகாலைத் பொழுதினில் அயர்ந்துறங்கும்
தேவதையின் தரிசனம் காண்கையில்
திடீரெனக் கண்விழித்து
"தூங்கும் போது கூட என்ன விட மாட்டியா?"
எனக் கேட்டு கேலியாய் கண்சிமிட்டும் காலைப் பொழுதுகள்
என் நினவெனும் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில்....


"ம்ம் ம்ஹும் ம்ஹும்" எனச் சினுங்கியபடியே
"சன்டே தான கிவ் மீ ஒன் மோர் ஹவர்"
என்னும் என் தேவதையின் கோரிக்கையை
என்றுமே நிராகரித்ததில்லை.......



களைப்பு மிகுந்து அயர்ந்து உறங்கிடும் நாட்களில்
காபிக்கோப்பையுடன் "குட் மார்னிங்"
என்னும் என்குரலுக்குக் கண் விழித்து
"அய்யோ செவன் தேர்ட்டியா? எழுப்பிருக்லாம்ல"
எனப் புருவங்கள் உயர்த்திக் கேட்கும் போது
என் தேவதையின் முகபாவங்கள்
என்றைக்கும் மதிப்புக்குறையா பொக்கிஷங்கள்......
கள்ளச் சிரிப்புடன் கைநீட்டும்போது
காபிக்கோப்பையை மட்டுமே தர முடிகிறது என்னால்....
உயிரும், நினைவும் ஏற்கனவே அவளிடத்தில்தான்
சொல்லாமலே எடுத்துக் கொண்டாள், அவளை அறியாமலேயே....

No comments:

Post a Comment