Thursday 29 December 2011

என்னைக்குச் செத்தாலும்.....

ஆழிசூழ் உலகில் அன்பிற்கும், அன்பளிப்பிற்கும் ஏங்காத மனமே இல்லை என்பது ஓர் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. நட்பு, காதல் மற்றும் நானாவித சுற்றங்களும் அன்பளிப்பிற்காக ஏங்கித்தான் கிடக்கின்றன இப்பால்வெளியில்.
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது இரண்டாம்/மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது பெப்பர்மின்ட்டோ, கம்மர்கட்டோ அன்பளிப்புக் கொடுத்ததோ பெற்றதோ உண்டா. நீங்கள் உங்கள் வாழ்வில், முதண்முதலில் அன்பளிப்பாக என்ன கொடுத்தீர்கள் / பெற்றீர்கள். யாருக்கு/யாரிடமிருந்து. 
இல்லை- எனில் விட்டுவிடுங்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்வதற்குத் தானே இல்லை செய்வதற்கு என்று கேட்காதீர்கள். செய்வதற்கும் ஒன்றும் இல்லை. முனைப்பற்ற அகத்தேடலில் உங்கள் வாழ்வு கழியட்டும்.

ஆம் - எனில் எங்கே சொல்லுங்கள் அந்த அன்பளிப்பினை அளித்த அல்லது பெற்ற அந்த நண்பன்/தோழியின் பெயர் ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு. அந்த நண்பர்/தோழி தொடர்பில் இருக்கிறாரா இன்றும் உங்களுடன். 

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முதலாக பள்ளியில் அன்பளிப்புக் கொடுத்த தோழியின் பெயர். அவளது பெற்றோர் வகுப்பறையில் விட்டுச் சென்றவுடன் ஓ ஊ என்று ஒரே அழுகை. ஆசிரியையோ இரண்டு முறை சொல்லிப் பார்த்துவிட்டு பளார், பளார் என்று கண்ணங்களைப் பழுக்க வைத்தார். அவள் மேலும் வீறுகொண்டு (வீறிட்டு) அழுதாள். எப்போதும் அடுத்தவரிடம் இருப்பதைப் பிடுங்கி மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்ட நான் எனது சட்டைப் பாக்கெட்டில் தேடி ஒன்றுமே இல்லை என்பதால் அருகிலிருந்த, அன்று வரை யார் என்றே தெரியாத, அநதச் சிறுவனிடம் இருந்து இருந்த கம்மர்கட் மிட்டாய்களில் ஒன்றைப் பிடுங்கி அவளிடம் நீட்ட நின்றது அவள் அழுகை. பிறகு அந்தக் கம்மர்கட் அவளின் மாமூலானது. கம்மர்கட் மட்டும் அல்லாது, பெப்பர் மின்ட், சீனிமிட்டாய், பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய் என்று எமது நண்பர்களோடு சேர்ந்து வளர்ந்தது எமது நட்பு. 'பாலினம்" என்ற பேதம் அறியாத நட்பு. நடுநிலைப் பள்ளிகள் பிரித்தன. நட்பு தொடர்ந்தது. அவள் வாயாடியாகவும், நாங்கள் தறுதலைகளாகவும், வளர்ந்தோம்.

கல்லூரி ராகிங்கில் அவளைக் "கருவாச்சி" என்றழைத்த அவளது கல்லூரி சீனியர்களைப் பற்றி அவள் தறுதலைகளில் ஒன்றிடம் சொல்ல, உடனே தற்போது ஒரு பன்னாட்டு கட்டுமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவில், தேசிய அளவில் உயர் பதவி வகிக்கும் அப்போதைய தறுதலையும், தற்போது லன்டன் துரைகளுக்கு அவர்தம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும், அந்நாளைய கூளக்கெடாவை அழைத்துக் கொண்டு நேரேக் கல்லூரிக்கே போய், "எவடி அவ எங்க புள்ளய கருவாச்சினு கேட்டவ. அந்த வெள்ளக்காரி எவடி ? வாடி முன்னால. ஏன்டி உங்கம்மாளுக ஒங்கள எல்லாம் என்னா வெள்ளக்காரனுக்க பெத்தாளுக? எங்க புள்ளையப் பாத்துக் கருவாச்சினு கேக்க. என்று ஆரம்பித்து, கிழித்துத் தோரனம் கட்டிவிட்டு வந்துவிட்டார்கள். அவளே ஓரிரு நாட்கள் கழித்து "அடப்பாவிகளா நீங்க அவ்ளோ பெரிய ரௌடிகளாடா?" என்று கேட்டுச் சிரித்தாள். அவளுக்கு அதன் பின் ராஜ மரியாதை கல்லுரியில் கிட்டத்தட்ட ஒரு தாதாவாக வலம் வந்திருக்கிறாள் அந்த மகளிர் கல்லூரியில்.இந்த மிரட்டலும், அன்பளிப்பே. ஆம் உண்ட இறைச்சியில் ருசி மிகுந்த துண்டத்தைச், சுவைத்துப் பார்த்து, பரமனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்த கண்ணப்பரைத் தெரியும் தானே உங்களுக்கு 

தொடர்ந்தது நட்பு.கல்லூரி தாண்டியும். எங்கள் நட்பைப் புரிந்து கொள்ளாத, தவறாய்ப் பார்க்கும் கண்கள் பாவம் செய்தவை.

வேலைக்காக சென்னை வந்த அவள், எக்மோரில் இறங்கியதும் முதலில் தொடர்பு கொண்டது எங்களைத்தான். அவள் ஆஃபர் லெட்டருடன். நானோ( நாங்களோ) வேலை தேடிக்கொண்டு. ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுப் பின்னர், அவளை வண்டியில் அமரவைத்து இது தான் எல்.ஐ.சி பில்டிங்கு, இது ஸ்பென்ஸர் ப்ளாஸா, இது தான் ஜெமினி ஃப்ளை ஓவர் என்று காட்டிகொண்டே வந்ததும் அவள் அந்தக் கம்மர்கட்டைப் பார்த்த அதே குதூகலத்துடன் கண்கள் விரிய பார்த்தபடி வந்ததும் ஏதோ போனவாரம் பார்த்த சினிமா போல் நிற்கிறது மனதில்.

அவள் திருமனத்தில் நாங்கள் அடித்த கூத்துக்களை அதிகம் ரசித்தது அவளது கணவர் தான். 

கடந்த வருடம் அவளுக்குக் குழந்தை பிறந்திருந்த போது அவளைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றபோது குழந்தை பிறந்து இரண்டு நாட்களாகி விட்டிருந்தது. இரண்டு நாளும் போகமுடியாமற் போனதற்குக் காரணம் எங்கள் நண்பர்களில் ஒருவன், இன்று வேண்டாம் என்று இரண்டு நாட்களும் தடுத்ததே. 

நாங்கள் சென்ற போதும் அவன் வரவில்லை. "நீங்க அங்க வந்துருங்க. எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேல இருக்கு" என்று சொன்னவன், தாமதமாய்த் தான் வந்தான் மருத்துவமனைக்கு. யாரிடமும் எதுவும் பேசாமல், அவளருகில் சென்றவன், "இனிமேலாச்சு சேட்ட பண்ணாம, உங்க வீட்டுக்காரர் பேச்சக் கேட்டு நட", என்று சொன்னவன், கைகளை நீட்டினான்.அவன் கைகளில் ஒரு பாக்கெட் கம்மர்கட்.

ரெண்டுநாளா இதுக்குத்தான்டா அலஞ்சேன், என்று அவன் சொல்லவும், அவள் அவளது கணவரைக் கட்டிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏதோ செய்கிறது மனதை, இப்போது நினைத்துப் பார்த்தாலும். அதுவரை, அவள் அழுகையை நிறுத்தவும், கோபத்தைக் குறைக்கவும் மட்டுமே செய்த/பயன்பட்ட கம்மர்கட் முதல் முறை அவளை அழ வைத்தது. 
அடுத்த நாள் மாலை அவளது கணவன் அழைத்து, நீங்க எல்லாரும் போன அப்புறம் அவ யார்கூடவும் பேசவே இல்லங்க. எப்பப் பாரு எதாச்சு சொல்லி என்னோட சண்ட போட்டுட்டு இருப்பா, இல்ல எதாச்சு சேட்ட பண்ணீட்டு இருப்பா. அவ அமைதியா இருந்தா மனசு கஷ்டமா இருக்குங்க என்று சொன்னபோது நெகிழ்ந்தது மனது. 

************************************ 

அன்னதாதா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாவிட்டால் அது உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம். உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு அன்பளிப்புக் கொடுக்க நினைத்து சூழ்நிலை கைதியாகி இயலாமையை நொந்து இருக்கிறீர்களா?

2003 -ஆம் வருடத்தின் செப்டம்பர் மாதம்.

கோயில்மாடு, கூளக்கெடா, தலப்பெரட்டு,கண்டச்சனி, சோத்துமாடு, தறுதல, ஏழ்ர, கெடமாடு, வில்லங்கம்,ஊரெழவு,கந்தரகோலம், மலமாடு, திருகுதாலம் என்றெல்லாம் மதுரைவாழ் மக்களால் "அன்போடு" அழைக்கப்பட்ட நாங்கள் இருபத்தியாறு பேர் சென்னை வந்தடைந்தோம். பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாம்பலத்தில் நின்றதும், இறங்கி அழைத்தோம் நண்பனை.

எங்கள் குழுவில் அவன் மட்டும் தான் அப்போது உத்யோகஸ்தன். இந்தியாவின் முதல் மூன்று மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றில் அவனுக்கு வேலை. ஐந்து இலக்க சம்பளம். "பங்காளிகளா வாங்கடா வாங்கடா. வராமப் போயிருவீங்களோன்னு பயந்துக்கிட்டுக் கெடந்தேன்டி பங்காளியா, வாங்க போவோம்" என்று அழைத்துச் சென்றான். 

டீக்கடையில் டீ குடிப்பதற்கு முழு நூறு ருபாய் நோட்டை அவன் மாற்றிய போது என்னவோ போலிருந்தது எங்கள் எல்லோருக்கும். இத்தனைக்கும் நாங்கள் இருபது வருடமாய் நண்பர்கள். நல்லதோ கெட்டதோ சேர்ந்தே செய்துதான் பழக்கம். ஆனால் இது புதிது எங்களுக்கு. அவனோ மும்முரமாய்ச் சொன்னான் மாஸ்டரிடம் " எண்ணே 19 டீ, அதுல 2 ஸ்ட்ராங்கு, 8 காபி அதுல 3 மூனு ஸ்ட்ராங்கு, ஒன்னு லைட்டு என்று.என் மனம் சொன்னது "சம்பாதிச்சு இவனுக்கு எதாவது பெரிசா செய்யனும். இல்ல நாக்கப் புடுங்கிக்கிட்டு செத்துரனும்" என்று. எங்கள் இருபத்தியாறு பேரின் மனமும் அதையே தான் சொன்னது என்பதைப் பின்னால் அறிந்தபோது நெகிழ்ந்தோம். 

நாங்கள் சென்றவுடன் அவன் செய்த முதல் நல்ல காரியம் எல்லோருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் மாத டோக்கன் வாங்கிக் கொடுத்தது தான். அன்னதாதா அவன் எங்களுக்கு. அலுவலக நிகழ்ச்சிகளில் உணவு விருந்து இருந்தால் எங்கள் அனைவரையும் அழத்துச் செல்வான், அவனது அலுவலக நண்பர்களின் பாஸ்கள் எல்லாவற்றையும் வாங்கி. நாங்களும் தேடினோம் வேலையை. 


அவன் வீட்டிலோ அவனுக்கு திடீரென்று திருமன ஏற்பாடு. "டேய் நானு ஊருக்குப் போறேன் இந்த வாரம். யாரெல்லாம் வர்ரது" என்ற கேள்விக்கு " நீ போய்ட்டு வாடா" என்று அனுப்பி வைத்தோம். 
ஊரிலிருந்து வந்தவன் தொங்கிய முகத்துடன் சொன்னான். "மாப்ள ஊருக்கு வரச் சொல்லிப் பெருசுக கழுத்தறுத்துருச்சுகடா. எங்க அக்கா மக *****புள்ள இருக்குல்ல, அந்தப் புள்ளைக்கும் எனக்கும் கல்யானம்டா" என்றவனை, கட்டித் தழுவிக் கேட்டோம் அதுக்கேன்டா எழவு சொல்ற மாதிரி சொல்ற என்று. 

அவனது பதில்"போங்கடா பேப்பய புள்ளைகளா. கல்யானமாகி நானு எம்பொண்டாட்டியக் கூட்டிகிட்டுப் போயிருவேன், நீங்க செலவுக்கு என்னடா பண்ணுவீங்க அறிவு கெட்டவய்ங்களா" பொட்டுக்குழியில் சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு எங்களுக்கு. எங்களில் இருவருக்கு வேலை கிடைதத பின் திருமனத்திற்கு ஒப்புக் கொண்டான். எங்கள் நேரம் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆனால் தான் சம்பளம் கொடுப்போம் என்று அலுவலகம் சொல்லியது. திருமனமோ இரண்டாவது வாரத்திலேயே வந்தது. மதுரையில், திருப்பரங்குன்றத்தில் திருமனம். பஸ்ஸுக்குக் கூட பணம் இல்லை. இதில் அன்பளிப்பு செய்வது எங்கே. மொய் செய்யாமல் சாப்பிட்டு வந்தோம்


திருமனம் முடிந்த பின் சென்னையில், மனைவியுடன் வேறு வீடு பார்த்துக் கிளம்பிய அவனுடன் போனில் பேசுவதோடு சரி. வீட்டிற்கு அவனும், அவன் மனைவியும் வருந்தி அழைத்தும் செல்லவே இல்லை. மிகுந்த வற்புறுத்தலின் பேரிலும், சென்னை வந்ததால் இழந்திருந்தஞாயிறுகாலை - இட்லி, கறிக்கொழம்பு - சாப்பிட அடிமனது ஏங்கியதாலும் அவன் வீட்டிற்குச் செல்ல, பேரதிர்ச்சி. அவனது மாமனாரும், மாமியாரும் வந்திருந்தனர். சொல்லாமல் கிளம்பி வரும் விருந்தினர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பது எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்குகிறது பாருங்கள். எங்களிடமே கேட்டுவிட்டார் மாமனார். "ஏப்பா இன்னமும் இப்படிதானா இருக்கீக" என்று. ஆயினும், நண்பனும், எங்களை அண்ணே என்று அழைக்கும் அவனின் வெள்ளந்தி மனைவியும் மனம் நோகலாகாது என சம்பிரதாயமாய் உணவருந்திக் கிளம்பினோம். 


பின்னாளில் அனைவரும் செட்டிலாகி, அயிரம் ரூபாய் ஒருவேளைச் சாப்பாட்டிற்கும், சில ஆயிரங்கள் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்கும், லட்சங்கள் லட்சியமற்றும் புரண்ட சுபவேளையில், நண்பனின் மனைவி பிரசவத்திற்காக மதுரை சென்று விட, காய்ந்த மாடுகள் நாங்கள் அனைவரும் ஒரு சனிமாலை( மாலையிட்ட சனி?) அவனது அழைப்பின் பேரில் அவன் வீட்டிற்குச் சென்று கம்பங்கொள்ளை ஆக்கினோம். 


மறுநாள் மதியம் போல் ஒவ்வொருவராய் கண்விழிக்க, ஒட்டுமொத்த அப்பார்ட்மென்ட்டும் வீட்டு வாசாலில். எதோ ஒரு பொண்டாட்டி தாச ஜந்து கேட்டது. செகரட்ரியாம்."என்ன சார் நெனச்சீங்க. அப்பார்ட்மென்ட் ரூல்ஸ் தெரியுமா? யார் யாரையோ கூட்டிட்டு வந்து நைட்டு பூராம் ஒரே கூத்து. எவ்வளவு சவுண்டு. என்னென்ன பேச்சு. அதுவும் பச்ச பச்சயா எல்லா சினிமா நடிகையவும் ஒவ்வொருத்தரா இழுத்து வச்சு".

உற்சாக பாணம் அருந்தினால் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து 4 விதிகள் உள்ளன 1) சினிமா நடிகைகள் பற்றி 2) அரசியல் 3) காதல் ( பெரும்பாலும் தோல்வி, மற்றும் தன்னைக் கழட்டி விட்ட பெண்ணின் குடும்பத்தைப் பற்றி) 4)உலகமயமாக்கல், புவிவெப்பமுறுதல் போன்ற உலகளாவிய தலைப்புக்கள். தமிழ்க்குடி மக்களின் இந்த அடிப்படை கூடத் தெரியாத அந்த T-ஷர்ட் ஜந்துவை எவன் செகரட்டரி ஆக்கினானோ தெரியவில்லை.


மது அருந்தாத இரண்டு பேர் நானும் இன்னொரு நண்பனும். போதையில் இருக்கும் அவர்களிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதால், எங்களிடம் பேசினார்கள், ஏதோ பிரயோஜனம் இருக்கப் போவது போல் எண்ணிக் கொண்டு. "காலேல வந்து பாத்தா கதவு தட்னா தொறக்கவே இல்ல. என்ன சார் இது. நாங்க எல்லாம் ஃபேமிலி இருக்கோம் சார்" என்றவரை நண்பன் சமாதானப்படுத்த முயல, அதற்குள் கெடமாடுகளில் ஒன்று "நாங்க தான் பேசுனோம் நீங்க ஏன் கேட்டீங்க. கண்ண மூடித் தூங்க வேண்டியது தான. பெரியமனுஷன் தான நீங்க ? ஒட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தீங்களா? வெக்கமா இல்லையா" என்று எங்கள் பாரம்பர்யப் பேச்சு உத்தியைக் கையாள, விஷயம் முற்றி நான்கு தெரு தள்ளி வசிக்கும் ஹவுஸ் ஓனர் வரை சென்று அவரும் வீட்டைக் காலி செய்ய சொல்லிவிட்டார். நண்பனும் "சரி சார் ரூல்ஸ் படி மூனு மாசம் டயம் குடுங்க" எனவும் அதெல்லாம் முடியாது என்று அசோசியேசன் முறுக்கிக்கொண்டு நிற்க, பின்னர் வேறு வழியின்றி " ஆமாடா அப்டித்தான்டா செய்வாங்க எங்க பசங்க. நீங்க எல்லாரும் சேந்து என்னா கழட்ட முடியுமோ கழட்டிக்கோங்கடா, ஆனதப் பாருங்கடா. என்னடா போலீஸ்னாப் பயந்துருவோமா. அதுக்கெல்லம் வேற ஆள் பாரு, எங்க கூப்புடுங்கடா போலீசப் பாப்போம்" என்று அனைவரையும் சகட்டு மேனிக்கு ஒருமையில் சாடி, நண்பன் முற்றுப்புள்ளி வைத்தான்.

மேய்ப்பனற்ற மந்தையாடுகள் களைந்து சென்றன. கெடமாடுகளோ " அதுதேன் காலி பண்றதுன்னு ஆகிப்போச்சு அப்புறம் இவய்ங்களுக்கு என்ன மாப்ள மரியாத " என்றவாறு அடுத்த ரவுண்டுக்குத் தயாராகின. லட்சங்கள் இலகுவாகப் புரட்டும் நிலையில் இருந்த தறுதலைகள் உருப்படியாய் ஒரு காரியம் செய்தன. ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து, மொத்தமாய்ச் சேர்த்து, ஒரு கிரவுண்ட் இடம் வாங்கின நண்பன் பெயரில். நல்லவேளையாக அப்போது விற்பவர் மட்டும் கையொப்பமிட்டால் போதும் என்பதால் நன்பனுக்குத் தெரியாமலேயே அவன் பெயரில் இடம் வாங்க முடிந்தது. பிறகு வீடு கட்டத் துவங்கி சரியாக 53 நாட்களில் வீடு ரெடி. அரை கிரவுண்டில் வீடு. மீதித் தோட்டம்.பெயின்டிங்க மட்டும் பாக்கி. அவனுக்குப் பிடித்த ஸ்கை ப்ளூ அவுட்டர் ஷேடும், பிஸ்தா க்ரீன் இன்னர் ஷேடும் என பெயின்டிங்க் நடந்து கொண்டிருக்க அவன் அப்பாவாகிறான். 

ஊருக்குக் கிளம்ப இருந்தவனை இருடா ஒரு முக்கியமான விஷயம்டா என்று சொல்லவும், அவன் செய்த அடுத்த வேலை அவன் மனைவிக்கு அலைபேசியது. "நான் கெளம்பிட்டேன் ஒரு 30 மினிட்ஸ்ல் ஏர்போர்ட் வந்துருவேன். ஆமா பத்து மனிக்குத் தான் ஃப்ளைட். மதிய சாப்பாடு நம்ம ரெண்டு பேரும் சாரி மூனு பேரும் சேந்து தான் சாப்பிடுறோம்" என்றவனை அழைத்துச் சென்றோம் கட்டிடத்திற்கு, அவனோ எங்கடா கூட்டிட்டுப் போறீங்க என்றபடியே வந்தான். வீட்டின் அருகில் நிறுத்தவும், ஒரு கணம் வீட்டையே பார்த்தவன், சொன்னான் "சம்பாதிச்சு இப்டி ஒரு வீட்டக் கட்டிப்புடனும் மாப்ள". தறுதலைகளில் ஒன்று சொன்னது "மாப்ள கட்ன வீட்ட எதுக்குடா ஈனொரு தடவ கட்டனும், எல்லாம் ஏற்கனவே கட்டியாச்சப்பா. பெயின்டிங் தான் பாக்கி" என்று தொடங்கி, விஷயத்தை விளக்கவும், அவன் செயலற்றுச் சொன்ன வார்த்தைகள் " மாப்ள நானு எப்பச் செத்தாலும் சரிடா, என்னைய இங்கயே பொதச்சுருங்கடா". 



வாங்கிக் கொடுத்த கம்மர்கட்டும், கட்டிக் கொடுத்த வீடும் அன்பளிப்புக்கள் அல்ல.

தோழிக்கு - அவ அமைதியா இருந்தா, எதோ மாதிரியா இருக்குங்க. எங்கம்மா கூட என்னடா எலியும் பூனையுமா சேட்டப் பண்ணுவீங்க, என்னா ஆச்சு, எதும் பிரச்சனையா அப்டின்னு கேகுறாங்க என்று சொன்ன அவள் கணவன், அவளை, அவளின் சுட்டித்தனத்தை ஏற்றுக்கொள்ளவும், ரசிக்கவும் வைத்தது தான் அவளுக்கு எங்களின் அன்பளிப்பு. 

நண்பனுக்கு - மாப்ள செஞ்சா சரியாத்தான் இருக்கும். நாங்கூட என்னமோ நெனச்சேன். ஆனா நீங்க பெரிய ஆளு மாப்ள என்று அவன் உறவுகளெல்லாம் அவனைப் பிரமித்துப் பார்க்க வைத்தது தான் எங்களின் அன்பளிப்பு. 


எங்களுக்கு அவர்களின் அன்பளிப்பு ? எங்கள் அரட்டைக் கச்சேரியில் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் தோழியின் கணவனும், நண்பர்களின் மனைவிமார்களும். 

1 comment:

  1. kann kalanga vechiteenga... poraamaya irukku ungala paathaa... nice writing..keep it up

    ReplyDelete